Tr.MANGALESWARI BT-English
Govt.Girls.Hr.Sec.School-Kovilpatti
Thoothukudi-dist
Govt.Girls.Hr.Sec.School-Kovilpatti
Thoothukudi-dist
ஆசிரியர்களின் அனுபவங்களை ஆன்லைன் கல்வி ரேடியோவில் E- book க்காக தொகுக்கும் முடிவில் , நானும் ஒரு ஆசிரியராய் ,ஆன்லைன் கல்வி ரேடியோவில் ஒன்றரை வருட காலம் பயணித்த ஒரு பயணி என்ற முறையில், என் அனுபவங்களைத் தொகுத்து அனுப்பி உள்ளேன் . இதனை வாசிக்கும் ஆசிரியப் பெருமக்கள், மாணவச் செல்வங்கள் மற்றும் ஆன்லைன் கல்வி ரேடியோவின் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் என் கனிவான வணக்கங்கள்!🙏🏻 நல்லாசிரியர் மற்றும் அன்பாசிரியர் சொ. மங்களேஸ்வரி (எம். ஏ., பி.எட் .,எம்.பில்.,) ஆகிய நான் தமிழக அரசால் 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று அன்றைய முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களால் 13 டிசம்பர் 2012ல் சென்னை ஒய். எம் .சி .ஏ மைதானத்தில் வைத்து பணி ஆணை வழங்கப்பெற்று 17 டிசம்பர் 2012 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தேன். பணிக்கு சேர்ந்த நாளில் பி பி டி எனும் Power point presentation போட்டு பாடம் நடத்தும் அறிவும், ஆர்வத்துடனும் பணியை தொடங்கினேன். லேப்டாப்பில் பிள்ளைகளுக்கு படங்கள் மற்றும் பாடத் தலைப்பிற்கு ஏற்ற வீடியோக்களைக் காண்பித்துப் பாடங்களை நடத்தி, மாணவர்களை பல செயல்பாடுகளுக்கு உட்படுத்தி, அதில் சிறந்தவைகளைத் தேர்வு செய்து, வருட இறுதியில் பிப்ரவரி மாதம் லேர்னிங் அவுட்கம் ப்ரோக்ராம் ( Learning outcome programme) என நடத்தி, பரிசு வழங்குவதும் வருட இலக்காக இருந்தது . அதனை வீடியோ செய்து லேப்டாப்பில் போட்டுக் காட்டி ,ஆங்கிலம் என்றாலே பயந்து படிக்க மறுக்கும் பிள்ளைகளுக்கு ,ஆர்வம் ஏற்படுத்துவதே என் முயற்சியாக இருந்தது. ஏற்கனவே மெட்ரிகுலேஷன் பள்ளியில் செய்துவந்த பணியை நிறுத்தவோ மாற்றவோ கூடாது என்ற வைராக்கியமும் முழுமுதற் காரணமாக அமைந்தது .இவ்வாறாக செய்த போது மாணவர்களின் ஆர்வமும் ,புரிதலும் மேம்படுவதைப் பார்க்க முடிந்தது. " பயத்தைப் போக்கி -பயணத்தில், படிப்பெனும் பயணத்தில், பங்கெடுக்க வைக்க முடிந்தது. இப்படியாகச் சென்று கொண்டிருந்த எனது ஏழு வருட ஆசிரியர் பணியில், மெல்ல கற்கும் மாணவர்களுக்காக, அவர்கள் மெல்ல கற்போராக இருக்கக் காரணமே, வாசிப்புத் திறன் இல்லால் தான் என்று புரிந்த நாள் முதல், நான் தயாரிக்கும் பவர் பாயிண்ட் ப்ரசெண்டேஷனில், என்னுடைய வாய்ஸ் ஆடியோவை இணைத்து, அவர்கள் வாசிப்பதற்கான நேரம் விட்டு பதிவு செய்து, வகுப்பில் ப்ளூடூத் ஸ்பீக்கர் பயன்படுத்தி, அவர்களை மீண்டும் மீண்டும் கேட்க வைப்பது என்று முடிவு செய்து Question pattern ல் அவர்கள் எந்தெந்த கேள்விகளில் கவனம் செலுத்தினால் தேர்ச்சி பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொண்டு, ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள்களுக்கு PPT தயார் செய்து, பயிற்சி அளித்து வந்ததே தலைமை ஆசிரியை மற்றும் கல்வி அதிகாரிகளால் பாராட்ட பெற்றது. எல்லா நேரங்களிலும் லேப்டாப் பயன்படுத்த முடியாது என்று எண்ணி, சார்ட்டில் கேள்விகளை எழுதி டெஸ்கில் பரப்பி வைத்து விடுவேன். அருகில் லீடர்களை நிறுத்தி வாசிக்கப் பழக்குவேன் அல்லது நானே வாசித்துக் கொடுப்பேன். இவ்வாறாக வாசிப்புத் திறனை மேம்படுத்தினேன். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஆர் பி ஆக செல்லும் இடத்தில் இவ்விரண்டையும் செய்து காண்பித்தபோது Innovative வாக உள்ளது என பாராட்டும் பெற்றுத் தந்த விஷயங்கள் இவை .இவ்வாறு சிறந்த முறையில் சென்ற பணியில் அடுத்த கட்டமாக வாட்ஸாப் மூலமும் ,ஆண்ட்ராய்டு போன் இல்லாத மாணவியரிடம் போன் கால் செய்தும் படித்து ஒப்புவிக்க செய்தேன். வாட்ஸ் அப் குழு ஆரம்பித்த ஒரு வாரத்தில் மாணவியரிடம் சிறிது வேறுபாடும் தெரிய ஆரம்பித்தது. "அற்புதமான அர்ப்பணிப்பு பணியில் அரங்கேறிய அரக்கன் தான் -கொரோனா (கோவிட் 19). மார்ச் 21 2020 இல் பத்தாம் வகுப்பு தேர்வு ஆரம்பிக்க நான்கைந்து நாட்களே இருந்த நிலையில் ஊரையே அடக்கி ,வீட்டில் பதுக்கி, ஆசிரியர்களைத் தனிமையில் பள்ளியில் பரிதவிக்க விட்டு ,15 நாட்களில் நிலைமை சீரடையும் ... ஒரு மாதத்தில் சீரடையும்... அதன் பின் தேர்வு இருக்கும் ....என்ற எதிர்பார்ப்பில் மூழ்கடித்து..... அனைவரையும் ஊரடங்கு எனும் பெயரில் , தேர்வை நிறுத்தி, வீட்டில் சிறை வைத்து, உல்லாசமாய் உலவியது கோவிட்- 19 வைரஸ் . அச்சூழலில் ஆர்ப்பரிப்பு, அவசரகதி என ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில், மண்பானை சமையல்... நிதானமான, பரபரப்பில்லாத வீட்டு வேலை, தாயம், பல்லாங்குழி, சீட்டு கட்டு, கேரம் என பாரம்பரிய வீட்டு சூழலை அமைத்து சந்தோஷமாக இருக்க முடிந்தாலும் ,பணியில் தொய்வு, பள்ளிகளில்லாமல்- பராமரிப்பில்லா மாணவிகள் என ஏதோ ஒரு பெரும் குறை மனதை ஆட்டுவிக்க, மாணவியரைச் சென்றடைய ஓர் வழி கண்டடைய வேண்டும் என ஆர்வமும் ஆதங்கமும் ஏற்பட்டது .......(தொடரும்)
No comments:
Post a Comment