அறிமுகம் ....
ஒரு இனிய காலைப் பொழுது பொள்ளாச்சியில் இருந்து மதுரைக்கு செல்ல பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். கொரோனா -19 பெருந்தொற்றால் பள்ளி மாணவர்களின் கற்றல் தடைபட்ட பொழுது இடைவெளி இன்றி கற்சிலை தொடர்ந்து மேற்கொள்ள எவ்விதம் முயற்சிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் கைபேசியின் அழைப்பு வந்தது. எங்கள் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பட்டதாரி ஆசிரியை திருமதி. எம் ரஜனி அவர்கள் ஆன்லைன் கல்வி ரேடியோவை பற்றி சொல்லி அறிமுகம் செய்தார். நானும் உடனே என் கைப்பேசி மூலமாக ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகளை கேட்டறிந்தேன். இயக்குவதற்கு எளிமையாகவும், கேட்பதற்கு அருமையாகவும், இருந்தது. இவ்வாறு கையாளுவதற்கு எளிமையாக இருப்பதால் மாணவர்களின் கற்றலை நிச்சயம் ஆன்லைன் கல்வி ரேடியோ வலுப்படுத்தும் என்பதை புரிந்து கொண்டேன். மேலும் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த இக்கட்டான நோய் தொற்று சூழலில் கற்றலை தொடர நல்லதொரு வாய்ப்பு ஆன்லைன் கல்வி ரேடியோ மூலமாக கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். எங்கள் பள்ளி மாணவர்களுக்கு முதலில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் சிறப்பு அம்சங்களை பற்றியும், எவ்வாறு இயக்கி பயன்படுத்துவது என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறினேன். www.kalviradio.com இணைய வலை பக்கத்திற்கு சென்று மாணவர்கள் கற்றலுக்காக பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன்பின்னர் நானும் ஆன்லைன் கல்வி ரேடியோவில் சமூக அறிவியல் பாடத்தில் என் பங்களிப்பை தருவதற்கு ஆர்வம் காட்டினேன். இதனால் எங்கள் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் பயனுற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அப்பொழுது திரு. கார்த்திக் ராஜா அவர்களிடம் என் பங்களிப்பு செய்யும் எண்ணத்தை வெளிப்படுத்தினேன். அவர் மிகவும் பொறுமையாக, நிதானமாக, தெளிவாக ஆடியோ பதிவிடும் முறையினை விளக்கிக் கூறினார்.
"எய்தற்கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்."
என்ற வள்ளுவ பெருந்தகையின் வாக்கிலற்கேற்ப நல்ல செயல்களை நினைத்தவுடன் செய்ய வேண்டும் என்ற முனைப்பு தோன்றியது.
கற்பக விருட்சகம் கல்வி ரேடியோ....
எங்கள் பள்ளி பசுமையான சூழலில் போடிபாளையம் கிராமத்தில் அமைந்திருக்கிறது. இங்கு ஓரக்கலியூர், இராசி செட்டிபாளையம் போன்ற அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர் எனக்கு சிறுவயதில் இருந்து வானொலி கேட்கும் நல்ல பழக்கம் உண்டு. அதனால் வானொலி கேட்டுக்கொண்டே எனது அன்றாட பணிகளை உற்சாகத்துடன் தொடங்குவேன். நாம் செய்கின்ற பல்வேறு பணிகளுக்கு இடையே நிறைய தகவல்களையும், புதிய செய்திகளையும் கேட்டுக்கொண்டே செய்யலாம். அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். அதனால் தான் என் மாணவர்களை அடிக்கடி வானொலி கேட்கும்படி ஊக்கப்படுத்துவேன். அவ்வாறுதான் கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் பாட அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பக்க பலமாகவும், நவீன உத்தியாகவும் ஆன்லைன் கல்வி ரேடியோ இருந்தது. மேலும் வீட்டில் இருந்தபடியே பெற்றோர்களின் கண்காணிப்புடன் பள்ளி மாணவர்கள் தன்னார்வத்துடன் தங்களது கற்றலை மேற்கொள்ளவும், வழி வகுத்தது. மேலும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் வசதியாக அமைந்திருப்பது அதனுடைய தனிச்சிறப்பாகும். "எரிந்து கொண்டுள்ள விளக்கே, மற்ற விளக்குகளை ஏற்ற முடியும்." என்று ரவீந்திரநாத் தாகூர் கூறினார். எனவே எங்கள் கிராமப்புற மாணவர்கள் எளிமையாக வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொண்டதை சுய கற்றல் செய்து பயன் பெறுவதற்கும், கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி ரேடியோ பெரிதும் உதவியது. இன்று அனைத்து பள்ளி மாணவர்களும் எளிமையாக பயன்படுத்தும் வண்ணம் படைப்பு தொகுப்புகள் வலை பக்கங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ஆன்லைன் கல்வி ரேடியோவின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.
பங்களிப்பும் பயன்பாடும்..
"எனைத் தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்."
என்ற குறள் நெறி கேற்ப சிறந்த பெருமைகளை தரக்கூடிய நற்கருத்துக்களை மாணவர்கள் எளிமையாக கேட்டறிந்து, பயம் பெறுவதற்கு ஆன்லைன் கல்வி ரேடியோ புதிய பாதையை அமைத்து கொடுத்துள்ளது. இத்தகைய புதிய பாதையில் என் முதல் பயணம் ஆரம்பமானது. முதலில் ஆறு ,ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாட வினா- விடை தொகுப்புகளை ஆடியோ மூலம் பதிவு செய்து வழங்கினேன். பின்னர் கதை கேட்பதிலும் சொல்வதிலும் ஆர்வம் இருந்ததால் கதைகள் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள், நன்னெறி கருத்துக்கள் போன்றவற்றையும் பதிவு செய்தேன். மேலும் தேசிய திறனறி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு NMMS கையேடு வாயிலாக சமூக அறிவியல் முக்கிய பாட கருத்துக்கள் மற்றும் Points to remember, வினா தயாரிப்பு ஆகியவற்றையும் பதிவு செய்து வழங்கினேன். இவ்வாறு மாணவர்கள் ஆன்லைன் கல்வி ரேடியோவை பாட கருத்துக்கள், பாடல்கள், பாடப்பயிற்சிகள் Online Test என்று அதன் பல்வேறு பரிமாணங்களை சூழலுக்கு தகுந்தார் போல் பயன்படுத்தி வருகின்றனர். "அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்." இதனை தருவது கேடில் வெளிச்செல்வம் கல்வி ஆகும். கற்கும் மாணவர்களின் உளநிலையை அறிந்து கற்பித்தால் எதையும் எளிதாக கற்பிக்க முடியும். இந்த அறிவியல் தொழில்நுட்ப உலகத்தில் அறிவு பெருக்கம் அளவின்றி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இக்கால பட்டத்திற்கு பொருந்தும் வகையில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகளை ஆடியோ வழியாக மாணவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு கற்றலில் முன்னேற்றம் காண்கின்றார்கள். என் வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் பாட வேளைக்கு தகுந்தபடி வினா விடை தொகுப்புகளை மாணவர்கள் கேட்டு நோட்டில் எழுதி பார்ப்பார்கள். மீண்டும் நன்றாக பாட கருத்துக்களை வலுவூட்டுவதற்காக Points to remember பகுதியை கேட்க செய்வது உண்டு. மற்ற ஆசிரியர்கள் வராத நேரங்களில் அந்த பாடங்களை கேட்டுக்கொண்டே எழுதுவதற்கும், படிப்பதற்கும் பயிற்சி கொடுப்பேன். ஆர்வத்துடன் கவனிப்பதற்காக கதைகள் கேட்கச் செய்து ,அதில் உள்ள நன்னெறி கருத்துக்களை விவாதிப்பதும், அப்பொழுது நடக்கும். தன்னார்வம் மிக்க மாணவர்களை கண்டறிந்து மாலை நேரங்களிலும், விடுமுறை நேரங்களிலும், சொல்வதை எழுதுதல், பகுதியை கேட்டு எழுத ஊக்கப்படுத்தியதால், மாணவர்கள் நன்கு பயிற்சி வருகிறார்கள்.
No comments:
Post a Comment